விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! - இனி விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்தத் தடை..!

 
1 1

நவீன உலகில் பெரும்பாலானோர் பவர் பேங்கை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வெளியூர், வெளிநாடு பயணங்கள் போகும் போது, பவர் பேங்கையும் கையோடு எடுத்துச்செல்லும் நிலை தொடர்கிறது.
 

சமீபகாலமாக, விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்க், அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அரங்கேறி வரு கின்றன. இதையடுத்து, பல முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் சாதனத்தை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளன.
 

இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குநரகம், விமானங்களில் பவர் பேங்க் சாதனத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்படுவதாவது:
 

பவர் பேங்க் சாதனங்களில் லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இவை, கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 

எனவே, பவர் பேங்க் சாதனத்தை பயணியர் தங்கள் கைப்பையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பயணத்தின் போது எடுத்துச் செல்லப்படும் வேறு எந்த பைகளிலும், அதை வைக்கக் கூடாது.
 

அவ்வாறு வைத்திருக்கும் போது, பவர் பேங்க் எளிதில் தீப்பற்றினால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

கைப்பையில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்கை பயன்படுத்தி விமானங்களில் எந்த மின்னணு பொருட்களும் சார்ஜ் செய்யப்படக் கூடாது. எந்தவொரு சாதனமும் வெப்பம், புகை அல்லது அசாதாரண வாசனையை வெளியிட்டால், பயணியர் உடனடியாக விமானத்தில் உள்ள ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
 

லித்தியம் பேட்டரி விபத்துகள் தொடர்பான அனைத்து பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த அறிக்கையை, விமான நிறுவனங்கள் உடனடியாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு அளிக்க வேண்டும்.
 

பயணியர் பயன்படுத்தும் பல வகையான லித்தியம் பேட்டரிகளை பகுப்பாய்வு செய்து, ஆபத்து ஏற்படுவது தொடர்பான காரணிகளை விமான நிறுவனங்கள் ஆராய வேண்டும்.
 

அதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். லித்தியம் பேட்டரியால் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த தேவையான கருவிகள் விமானத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விபத்துகளை கையாள, விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.