“அரசு மருத்துவமனையில் ஒரு மாத்திரை, ஒரு மருந்து, ஊசி ஒன்னு தரல”- வலியில் கதறும் பெண்

 
ச்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், முறையான சிகிச்சையளிக்கப்படவில்லை எனப் பெண் ஒருவர் வேதனையுடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி பிரமு. வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, வெந்து கொண்டிருந்த சாதத்திற்குள் கை விழுந்ததில் இவரது வலது கையின் மூன்று விரல்கள் கடுமையாகத் தீக்காயமடைந்தன. சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும், மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை எனப் பிரமு வேதனை தெரிவித்துள்ளார். கடுமையான வலிக்கு மருந்து கேட்டால் கூட செவிலியர்கள் அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் மருத்துவமனையில் பார்த்திருந்தாலோ அல்லது வீட்டிலேயே மஞ்சள் அரைத்துப் பூசியிருந்தாலோ கூட குணமாகியிருக்கும், இங்கு எந்த முன்னேற்றமும் இல்லை" என அவர் கண்ணீருடன் புலம்பியுள்ளார்.