மருத்துவ துறையின் ஆராய்ச்சியை முன்னெடுக்க புது முயற்சி! அப்போலோ நாலெட்ஜ்- பிட்ஸ், பிலானி இடையே ஒப்பந்தம்
இந்தியாவில் மருத்துவ சேவைத் துறையின் ஆராய்ச்சியை முன்னெடுக்கவும், தொழில்நுட்பப் பணியாளர் திறனை மேம்படுத்தவும் அப்போலோ நாலெட்ஜ் (Apollo Knowledge) மற்றும் பிட்ஸ், பிலானி (BITS Pilani) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டு ஆராய்ச்சி, மருத்துவ சேவை நிபுணர்களுக்கு பணியுடன் இணைந்த கல்வித் திட்டங்கள், சிறப்பு அலைடு ஹெல்த் (Allied Health) மற்றும் மருத்துவ சேவைத் துறை தொழில்நுட்பத் திட்டங்கள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
அப்போலோ நாலெட்ஜ் (Apollo Knowledge) மற்றும் பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானி (Birla Institute of Technology and Science, Pilani - BITS, Pilani) ஆகியவை மருத்துவ சேவைத் துறை ஆராய்ச்சி, கல்வி மற்றும் பணியாளர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இரு நிறுவனங்களும், அண்மையில் (29 செப்டம்பர் 2026) கையெழுத்திட்டன. அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் (Apollo Hospitals Group) நிறுவனர் - தலைவர் (Founder - Chairman) டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் (Apollo Hospitals Enterprise Limited) நிறுவனத்தின் துணை செயல் தலைவர் (Executive Vice Chairperson) டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மற்றும் பிட்ஸ், பிலானி (BITS, Pilani) குழுமத்தின் துணை வேந்தர் (Group Vice-Chancellor) பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கூட்டாண்மை, அப்போலோ மருத்துவமனை வலையமைப்பின் மருத்துவச் சூழலையும், பிட்ஸ், பிலானி கல்வி நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறைகளின் திறன்களையும் ஒருங்கிணைக்கிறது. மருத்துவர்கள் மற்றும் பிட்ஸ், பிலானி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மருத்துவம் மற்றும் மருத்துவ சேவைத் துறைகளில் உள்ள சவால்கள் தொடர்பாக கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். இந்தக் கூட்டாண்மை மேலும் வளர்ச்சியடையும் நிலையில், குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறைகள் அடையாளம் காணப்படும்.
மருத்துவ சேவை நிபுணர்களுக்கான பணியுடன் இணைந்த கல்வித் திட்டங்களை உருவாக்குவதிலும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். இந்தத் திட்டங்களின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், அலைடு ஹெல்த் நிபுணர்கள் (Allied Health Professionals) மற்றும் மருத்துவ சேவைத் துறை மேலாளர்கள், தங்களது பணியைத் தொடர்ந்து கொண்டே மேம்பட்ட கல்வி அறிவைப் பெற முடியும். மருத்துவ சேவைத் துறைக்கான லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் (Healthcare Logistics and Supply Chain), மருந்தகம் (Pharmacy) மற்றும் மருத்துவமனையின் நிதிப் பிரிவு (Hospital Finance) உள்ளிட்ட துறைகள் பாடப் பிரிவுகளாக இருக்கும். இந்தப் பாடத்திட்டங்கள், சம்பந்தப்பட்ட நிபுணர்கள் நடைமுறையில் மேற்கொள்ளும் பணிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். இப்பயிற்சித் திட்டத்தால், தி அப்போலோ யுனிவர்சிட்டி (The Apollo University), அப்போலோ வலையமைப்பில் உள்ள மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகள் மற்றும் அப்போலோ ஹெல்த்கேர் அகாடமியின் கூட்டாளர் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறுவர். அலைடு ஹெல்த் மற்றும் ஹெல்த் கேர் டெக்னாலஜி துறைகளில் சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதும் இந்தக் கூட்டாண்மையின் மற்றொரு முக்கியப் பகுதியாகும். இதில் பிட்ஸ், பிலானியின் திறன் மேம்பாட்டு மையங்களுடன், அப்போலோ மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவப் பயிற்சியும் ஒருங்கிணைக்கப்படும்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “நோயறிதல், சிகிச்சை மற்றும் நோயாளிப் பராமரிப்பில் புதிய வாய்ப்புகளைத் திறந்து, தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், மருத்துவ சேவைத் துறை ஒரு மிகச் சிறப்பான காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இருப்பினும், மருத்துவ சேவைத் துறையின் எதிர்காலம் தொழில்நுட்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படாது. உயர் தொழில்நுட்பத்தையும், மனிதநேய அணுகுமுறையையும் ஒருங்கிணைத்து, புதுமையுடன் குணப்படுத்துதலின் மையமாக விளங்கும் மனிதத் தொடர்பையும் இணைக்கும் நமது திறனே மருத்துவ சேவைத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இந்த முக்கியமான கூட்டாண்மை, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பிட்ஸ், பிலானி ஆகிய இரண்டு முன்னோடி நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது. தங்களது துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய பாரம்பரியத்தையும், எதிர்காலத்தை வடிவமைப்பதில் அறிவின் சக்தி மீதான ஒரே மாதிரியான நம்பிக்கையையும் இவை கொண்டுள்ளன. மருத்துவ சேவைத் துறையின் நிபுணர்கள் தொடர்ந்து நோயாளிகளைப் பராமரிக்கும் பணியுடன் கல்வியைத் தொடரவும், வேகமாக மாறிவரும் உலகிற்குத் தேவையான திறன்களை உருவாக்கவும், மருத்துவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியை முன்னெடுக்கவும் இந்தக் கூட்டாண்மை வழிவகுக்கும். இதன் மூலம், மருத்துவ சேவைத் துறையின் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைமுறையினரை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்” என்றார்.
பிட்ஸ், பிலானி கல்விக் குழுமத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி. ராம்கோபால் ராவ் கூறுகையில், “பொறியியல், மனிதர்களின் வாழ்க்கையில் நேரடியான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் மருத்துவ சேவைத் துறையும் ஒன்றாகும். அப்போலோபின் மருத்துவச் சூழலுடனும், ஏராளமான மருத்துவ சேவைத் துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்களுடனும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை இந்தக் கூட்டாண்மை உருவாக்குகிறது. தொழில்நுட்பம், தரவு அறிவியல் மற்றும் பணியுடன் இணைந்த கல்வித் திட்டங்களை வழங்குவதில், எங்களது நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறையை நாங்கள் கொண்டு வருகிறோம். இந்தக் கூட்டாண்மை ஆராய்ச்சி மற்றும் திறன் பெற்ற பணியாளர்கள் என இரு துறைகளிலும் குறிப்பிடத்தக்க பலன்களை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அப்போலோ நாலெட்ஜ் பற்றி:
அப்போலோ நாலெட்ஜ் என்பது அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தொடங்குனர்களது ஆதரவுடன் செயல்படும் உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் திறன் வளர்ப்பு குழுமமாகும். மருத்துவம், செவிலியர் கல்வி, அலைடு ஹெல்த், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் இது செயல்பட்டு வருகிறது. தி அப்போலோ யுனிவர்சிட்டி, அப்போலோ இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், அப்போலோ நர்சிங் காலேஜஸ், அப்போலோ ஹெல்த் கேர் அகாடமி, மெட்வர்சிட்டி மற்றும் குளோபல் வொர்க் போர்ஸ் டெவலப்மெண்ட் ஆகியவை இதன் இணை நிறுவனங்களாகும். தற்போது 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகங்களில் பயின்று வருகின்றனர். இவர்கள் அப்போலோ மருத்துவமனைகளில் மருத்துவப் பயிற்சியும் பெற்று வருகின்றனர். மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைத் துறை நிபுணர்கள் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட ரேடியோகிராபர்கள் (Radiographers), இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (National Health Service) அமைப்பில், பணியில் சேர்ந்துள்ளனர்.
பிட்ஸ், பிலானி பற்றி:
பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்பது இந்தியாவின் முன்னணி தனியார் பல்கலைக்கழகம் (Deemed-to-be University) ஆகும். பிர்லா குடும்பத்தின் ஆதரவுடன் 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசால் இன்ஸ்டிட்டியூஷன் ஆஃப் எமிணன்ஸ் (Institution of Eminence) அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் ஆறு கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இக்கல்வி நிறுவனம் பிலானி, கோவா, ஐதராபாத், மும்பை, துபாய் ஆகிய இடங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. அதன் பணியுடன் இணைந்த கல்வித் திட்டங்கள் பிரிவு, 1979-ஆம் ஆண்டு முதல் பணியில் இருக்கும் தொழில்முறை நிபுணர்களுக்கான பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்களின் மூலம் இதுவரை 1,36,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை நிபுணர்கள் பட்டம் பெற்றுள்ளனர். தற்போது இந்தியா மற்றும் உலகின் 32-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000-க்கும் அதிகமானோர் இத்திட்டங்களில் பயின்று வருகின்றனர். பணியாளர் திறன் மேம்பாட்டிற்காக 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பிட்ஸ், பிலானி உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

