11 வயது மாணவியை மாதவிடாய் நேரத்தில் வெளியில் நிற்க வைத்த சம்பவம் - ஆசிரியர்களை இடமாற்றம்..!!
சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து வரும் 11 வயது நிரம்பிய மாணவி மாதவிடாய் காரணமாக அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர், அந்த மாணவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதாக கூறி, மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு கூறியதாக தெரிகிறது.
அந்த மாணவி பள்ளி முடியும் வரை சுமார் 4 மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி மாதவிடாயுடன் பள்ளி முடியும் வரை வெளியே நின்றுவிட்டு, வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடம் கூறி அழுததாக தெரிகிறது. இதுதொடர்பாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற நாளில், மாதவிடாய் காரணமாக உடல்நலக்குறைவு மற்றும் அசௌகரியத்தால் மாணவி அடிக்கடி கழிவறைக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறைக்குள் வந்த ஆசிரியர், மாணவியிடமிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, அவரை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு அறிவுறுத்தியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக மாணவி பள்ளி முடியும் வரை சுமார் நான்கு மணி நேரம் வகுப்பறைக்கு வெளியே நின்றதாகவும், சக மாணவர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சமூகப் பதிவேடு (CSR) பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காவல்துறை ஆய்வாளர் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் விளக்கம் மற்றும் கல்வித்துறை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் தரப்பின் விளக்கம்
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் வேறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளனர். மாணவியை வெளியே நிற்க வைக்கவில்லை என்றும், வகுப்பறையின் பின்புற இருக்கையில் அமருமாறு மட்டுமே கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவிக்கு உதவுவதற்காக அவரது தோழியை அழைத்து தேவையான உதவிகளை செய்யுமாறு ஆசிரியர் கூறியதாகவும், மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க முயற்சி செய்ததாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஆசிரியர் பெற்றோருடன் தொடர்புகொள்ள வெளியே சென்றிருந்த நேரத்தில், மாணவி தானாகவே வகுப்பறையை விட்டு வெளியேறி படிக்கட்டு அருகே அமர்ந்திருந்ததாகவும், இதுவே வெளியே நிற்க வைக்கப்பட்டதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கல்வித்துறை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி கல்வித்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இரு தரப்பினரின் விளக்கங்களும் பெறப்பட்டுள்ளன. மாணவியின் நலன் மற்றும் பள்ளி சூழலை கருத்தில் கொண்டு இடைக்கால நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் உண்மை நிலை, ஆசிரியர்களின் செயல்பாடு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை மற்றும் மாணவிக்கு ஏற்பட்ட மனநிலை பாதிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பள்ளிகளில் மாதவிடாய் விழிப்புணர்வு தொடர்பான நடைமுறைகள் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் உடல்நல தேவைகள் மற்றும் தனியுரிமையை மதிக்கும் வகையில் பள்ளிகளில் கூடுதல் வழிகாட்டுதல்கள் அவசியம் என கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

