அமிர்த பாரத் திட்டம் : 15 ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அமிர்த பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அம்பத்தூர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்க ரயில்வே அமைச்சகம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், தேவையை கருத்தில் கொண்டு மேம்படுத்த பெருந்திட்டம் தயார் செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் சென்னை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.
அதன்படி கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளுர், செயின்ட் தாமஸ் மவுன்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. இதன்படி ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இந்த ரயில் நிலையங்களில் முதல் கட்ட பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மிக முக்கியமாக குறைந்தபட்ச அத்தியாவசிய வசதி என்பதை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக புதிதாக மேம்படுத்தி, புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகளும் இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும்.