அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் ஆலை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைபேர் கிராமத்தில், 'செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இறால் ஏற்றுமதி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
நேற்று மதியம் அந்த தொழிற்சாலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்துள்ளது. இதனால் சில நிமிடங்களிலேயே அங்கிருந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 தொழிலாளர்கள் (70 பெண்கள், 4 ஆண்கள்) இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர், திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் என இன்று அதிகாலை வரை 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று காலை ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 -ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கொள்கலனை சரியாக பராமரிக்காமலும், தொழிற்சாலைக்கு உள்ளேயே தொழிலாளர்களை தங்கவைத்து உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட காரணமாக இருந்த உரிமையாளர், மனிதவள மேலாளர் உள்ளிட்ட மற்றும் பலர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவருடைய புகாரின் அடிப்படையில், 125(a), 105 BNS ஆகிய 2 பிரிவுகளில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, தொழிற்சாலையின் உரிமையாளர்களான தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜோசப் மோகன்(59), ராயபுரத்தை சேர்ந்த ஜோசப் ஜெகன்(49), மேலாளரான பெருங்குடியைச் சேர்ந்த டேனியல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் மூவருக்கும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

