சேலம் ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆத்தூரில் உள்ள சதாசிவபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆலையில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாயுக்கசிவு தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாயுக் ககசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தொழிற்சாலைகளில் வாயுக்கசிவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல, ஜூலை 25ம் தேதி திருவள்ளூரில் அரண்வாயலில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் லேசாக அமோனியா வாயு கசிந்தது. இதில், ஊழியர்கள் 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

