தொடரும் அம்மோனியா மரணம் : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!
திருவள்ளூர் கன்னிகைபேர் கிராமத்தில், புனித பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஜூன் 21ஆம், ஞாயிற்றுக்கிழமை அன்று, கூலிங் பைப்பில் இருந்து திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதனால் அந்த வளாகத்தில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 80 பேர் பாதிக்கப்பட்டனர். வாயுக்கசிவு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து துரிதமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.
எனினும், இந்த விபத்தில் அசாமை சேர்ந்த 20 பேர், ஒடிசாவை சேர்ந்த 29 பேர், ஜார்க்கண்டை சேர்ந்த 8 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 77 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில், 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
உயிரிழந்த 9 பேரின் விவரங்கள்
- ஷிபானி
- ஜுமானி ஜுவாங்
- கீதா ஜுவாங்கா
- பூர்ணிமா ஜுவாங்கா
- சம்பாபதி ஜுவாங்கா
- பிரபாவதி ஜுவாங்கா
- ஒருவர் அடையாளம் காணப்படவில்லை (மேற்கண்ட 7 பேர் ஒடிசாவை சேர்ந்தவர்கள்)
- சிட்டா ஹஸ்டா
- அடையாளம் காணப்படாத பெண் (இவர்கள் 2 பேர் அசாமை சேர்ந்தவர்கள்)

