மோடி வெற்றி பெற அமமுக 'அணில்' போல் செயல்படும் - தினகரன் பேட்டி!!
எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் ஆவது போட்டியிடுங்கள் என பாஜக கூறியது. நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. தொகுதிகள் என்ன என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் . பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ‘அணில்’ போல் செயல்படும்; தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பலத்தை கொடுக்கும். திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , அமமுக கட்சி தொகுதிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வில்லை. மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்; டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம். தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ளது; சட்டமன்ற தேர்தலில் போட்டியிடதான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர் என்றார்.