ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல்- தினகரன் கண்டனம்

 
ttv

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அராஜகப்போக்கில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற நடைபெற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரின் பண பலமும், படை பலமும் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயற்சித்திருக்கும் திமுக குண்டர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் அரங்கேற்றும் இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் அக்கட்சிக்குக் கிடைக்கப் போகும் வரலாற்றுத் தோல்வியையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.எனவே, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதோடு, அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.