‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சுண்டலில் பல்லி- டிடிவி தினகரன் கண்டனம்
சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டு 10க்கும் அதிகமான பேராசிரியர்கள் மயக்கமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்த திமுக அரசு, அவர்களுக்கான உணவை கூட தரமான முறையில் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்கச் செய்திருக்கிறது.

இதற்கிடையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பேராசிரியர்களுக்கான உணவையும் தரமற்ற முறையில் விநியோகித்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் தொடர் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


