கருணாநிதியை புகழ்வதாகக் கருதி காமராஜரை இழிவுபடுத்துவதா?- டிடிவி தினகரன்
காமராஜர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களைப் புகழ்வதாகக் கருதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்துவதா? – கர்ம வீரர் காமராஜர் அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பொதுவாழ்வில் தூய்மைக்கும், அரசியலில் நேர்மைக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, எளிமையின் சின்னமாகவே வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, குளிர்சாதன வசதியின்றி தூங்க மாட்டார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதோடு, உயிர் பிரியும் நேரத்தில் மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களின் கையைப் பற்றிக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனப் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கூறியதாகத் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது வழக்கமாக திமுக அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளின் உச்சபட்சமாகும். யாருக்கும் தலை வணங்காமல், யாரையும் தலைவணங்க விடாமல் தன் இறுதி மூச்சு வரை தனித்தன்மையுடன் வாழ்ந்த மாபெரும் தலைவரை, மாற்றுக்கட்சியினரையும் மதிக்கும் பண்பாட்டைக் கற்றுத்தந்த தனிப்பெரும் ஆளுமையை, சிறுமைப்படுத்தும் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தமிழக மக்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மக்களின் மத்தியில் வீரத்தையும், உறுதியையும் விதைத்து அவர்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் காமராஜர் அவர்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு, வருத்தமோ மன்னிப்போ கேட்காமல், விவாதப்பொருளாக்காமல் கடந்து செல்ல வேண்டும் எனத் திரு. திருச்சி சிவா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுகவினரின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் தன் கால்தடம் படியாத இடமே இருக்க முடியாது எனச் சொல்லும் அளவிற்குப் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, காடு, மேடு எனக் கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


