'லண்டனுக்கு ரீல்ஸ் கன்டென்ட்க்காக போயிருக்கிறார்' - டிடிவி தினகரன்
முதலமைச்சர் விஜயின் லண்டனை பயணம் குறித்த கேள்விக்கு 'லண்டனுக்கு ரீல்ஸ் கன்டென்ட்க்காக போயிருக்கிறார்' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தலை, கால் புரியாமல் செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய். ரீல்ஸ் எடுக்கவே அவர் லண்டன் சென்றிருக்கிறார். தற்குறி விஜய் கழகம்னு கட்சிப் பேரை மாத்திக்கிட்டா நல்லா இருக்கும். வீட்டிலிருந்து கிளம்பி திரும்பவும் வீட்டிற்குவரும் வரை சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதாக முதல்வர் விஜய் நினைக்கிறார். தாய்மொழி தமிழ்கூட அமைச்சர்களுக்கு தெரியவில்லை. சினிமா மோகத்தில் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டார்கள்.
வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு தவெகவிற்கு சென்றவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்ற பெற்ற இருவரும் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு ஆளுங்கட்சிக்கு போனது மட்டுமில்லாமல் இன்று அவர்களே வேட்பாளர்களாகவும் நிற்கிறார்கள்.. அந்த இருவருக்கும் தொகுதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லுகளை செய்தவர்கள் எப்படி நேர்மையானவர்களாக இருக்க முடியும். தூயசக்தி என்று சொல்வதெல்லாம் பொய்வாதம்.. இவர்கள் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்.. அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியது வன்மையாக கண்டிக்கதக்கது. குதிரை பேரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தவெக நேர்மையான ஆட்சி, தூய ஆட்சி என எப்படி சொல்ல முடியும்? முதல்வரின் தரம் என்ன என்பதை சட்டமன்றத்தில் பேசிக் காட்டிவிட்டார்” என்றார்.

