“மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்கவேண்டிய சுழல்”- டிடிவி தினகரன்

 
ttv ttv

பெரம்பலூர் அருகே காவலர் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் அருகே வழக்கு விசாரணைக்காக ரவுடியை அழைத்துச் சென்ற காவலர்கள் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் நான்கு காவலர்கள் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.   திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் தாரளப்புழக்கம், கள்ளத்துப்பாக்கி பயன்பாடு வரிசையில் தற்போது நாட்டு வெடிகுண்டு கலாச்சாரமும் இணைந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்கவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச்சம்பவங்களின் பின்னணியிலும் ஏதேனும் ஒருவகையில் திமுகவினருக்குத் தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் சட்டத்தின் மீது துளியளவும் குற்றவாளிகளுக்கு அச்சமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. எனவே, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்தியிருக்கும் இந்த நாட்டு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கு உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.