தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran ttv dhinakaran

கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ttv

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது.

காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.