“நான் வெளிக்கொணர்ந்த தவெகவின் குதிரைபேர அரசியல் வெட்ட வெளிச்சமாகி வருகிறது”- டிடிவி தினகரன்
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெகவின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜயின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி சட்டமன்றத்தில் வாக்களித்த சிவி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய மூவரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த கையோடு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த மூன்று தொகுதிகளுடன் சேர்த்து ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் சேர்த்து நான்கு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி, சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி அணி என இரண்டு அணிகள் இருந்த நிலையில் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

