இலவச மின்சாரம் அறிவிப்பில் முரண்: டிடிவி தினகரன் விமர்சனம்

 
ttv dhinakaran

தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல்  வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.  

தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.