ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி- டிடிவி தினகரன் கண்டனம்

 
ttv dhinakaran ttv dhinakaran

திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் திராவிட மாடலா ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ttv

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம் செட்டியத் தெருவில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது அடையாளம் தெரியாத கும்பல் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சி செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினருக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மட்டுமல்லாது, மணல் திருட்டுகளும், கனிமவளக் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாகிவிட்ட தமிழகத்தில் அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகிவருகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு தொடர்பாக 2023 ஆம் ஆண்டு 7,576 வழக்குகளையும், 2024 ஆம் ஆண்டு 11,085 வழக்குகளையும் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வின் மூலம் பதிவு செய்திருக்கும் திமுக அரசு, அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான அசாதாரண சூழலையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரகத் திருட்டை தடுக்க முடியாத திமுக அரசு, அதனை முறைகேடு எனக்கூறி சமாளித்ததை போல, பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு ஏதேனும் வினோத விளக்கத்தை அளிக்கப்போகிறதா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்காக விநியோகிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.