ரேஷன் கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா?- டிடிவி தினகரன்
நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா? பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் நியாயவிலைக்கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் நியாயவிலைக்கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது.
திமுக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


