பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறால் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர்- காரணம் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல: டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

திருநெல்வேலி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவரை அரிவாளால் சக மாணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் வன்முறையை அகற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ttv

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் இயங்கிவரும் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள்ளாக நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மோதல் சம்பவத்தை தடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் மீதும் நடைபெற்றிக்கும் தாக்குதல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் இரு மாணவர்களிடையே பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என காவல்துறையினர் கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. 

நாங்குநேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் வீடுபுகுந்து சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற மோதல் சம்பவங்களும், வன்முறை நிகழ்வுகளும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வன்முறை எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய பள்ளிகளில், இத்தகையை சம்பவங்கள் தொடராத வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.