மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா?- தினகரன்

 
ttv ttv

அரசுப்பள்ளி மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ttv dhinakaran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது. எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.