“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை மீட்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும்”- டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

ஒரத்தநாட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிகாட்டில் அமைந்துள்ள அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்பு பேட்டி அளித்த டிடிவி தினகரன், “உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை நலம் விசாரிக்க வந்தேன். வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய அமைச்சர் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். பழனிசாமிடம் இரட்டை இலை உள்ளதால் அம்மாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. அம்மாவின் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பழனிசாமி மூடு விழா நடத்தி விடுவார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற வேண்டும். பழனிசாமியிடமுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு அது மீட்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும்” என்றார்.