’கொரோனா அச்சம் நீங்கி ஆரோக்கியமாக வாழ வழி பிறக்கட்டும்.’ - டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து...

 
எவ்வளவு பட்டாலும் திருந்தாத டிடிவி தினகரன்! சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என முழக்கம்!!

தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைவருக்கும்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில்  நாளை முதல்  பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்க இருக்கிறது.. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், தமிழர் திருநாள் என 4 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து அறிக்கையில், “ ’விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை உலகிற்குச் சொல்லும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளில் உலகம் முழுக்க வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

’விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும்,  உழவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் கொண்டாடுவதற்காகதான் நம்முடைய முன்னோர் நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் திருநாளை வடிவமைத்திருக்கிறார்கள்.

டிடிவி தினகரன்

 பொங்கல் என்பது நமக்கு அறுவடைத் திருநாள் மட்டுமல்ல; உலகின் மூத்த குடி தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பறைசாற்றுவதற்கும், போற்றி கொண்டாடுவதற்குமான திருநாள்.  அதனை மனதில் கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழினத்தின் பெருமைகளை உயர்த்தி விடுவோம்.  

போகியில் பழையன நீங்கி ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று நம்முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனித குலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கொரோனா பாதிப்பும் முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும்.  எல்லா வளங்களையும்,  நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும்,  உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டுவந்து சேர்க்கும் என நெஞ்சார வாழ்த்துகிறேன்.” என்று  தெரிவித்துள்ளார்.

டிடிவி பொங்கல் வாழ்த்து