தீயிட்டு கொளுத்தப்பட்ட டிடிவி தினகரன் புகைப்படம்! கும்பகோணத்தில் பரபரப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆன தஞ்சையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத டிடிவி தினகரனை கண்டித்து ரங்கசாமி ஆதாரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுவதாகவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்ற உத்தேச பட்டியல் இன்று வெளியானது. அமமுக கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமிக்கு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்ததாகவும், ஆனால் இன்று வெளியான அமமுக வின் உத்தேச பட்டியலில் பாபநாசம் தொகுதி இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமியின் ஆதரவாளர்கள் கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் டிடிவி தினகரன் உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சம்பவம் அமமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

