அதிமுகவில் இணைந்த அமமுகவின் முக்கிய புள்ளிகள் - தொடர்ந்து அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி

 
eps

அமமுக தலைமை நிலைய செயலாளர், மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட அமமுக கட்சியை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகும் நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதனிடையே பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து இன்னும் சிலர் பாஜகவில் இருந்து விலகி நிர்மல் குமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். 

eps

இந்த நிலையில், இன்று அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.