ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - தினகரன் மடல்
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திடவும், மாநிலத்திற்கு வேண்டிய நலனை பெற்றுத்தருவதிலும் உறுதியோடு பணியாற்றிடுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழைக் காக்கவும், துரோகக் கூட்டங்களை தோலுரித்துக் காட்டவும் உருவாக்கப்பட்ட நமது அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் இதயமாக, தமிழக மக்களின் நம்பிக்கையாக, தமிழ்நாட்டின் எதிர்காலமாக ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வகுத்துக் கொடுக்கப்பட்ட பாதையில், மாநில உரிமைகளை பாதுகாப்பதில், எவ்வித சமரசமுமின்றி தமிழக மக்களின் வளர்ச்சியை மட்டுமே இதய தெய்வம் அம்மா அவர்கள் உயிர்மூச்சாகக்கொண்டு செயல்பட்டார். அம்மா அவர்களின் பெயரை இயக்கத்தின் பெயரிலும், திருவுருவத்தை கழக கொடியிலும், கொள்கைகளை தொண்டர்கள் அனைவரின் இதயத்திலும் ஏந்தி தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏழை, எளிய மக்கள் அனைவரின் மனதிலும் நிறைந்தும் நிலைத்தும் நிற்கிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை கொண்டு தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் லட்சோப லட்சம் உண்மைத் தொண்டர்களின் முன்னிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்ததை போல, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொண்டர்களாய் வாய்த்த ஆற்றல்மிகு லட்சக்கணக்கான இதயக்கனிகளால் தமிழக அரசியல் களத்தில் ஏற்றமிகு வளர்ச்சியை நாம் பெற்றுவருகிறோம். கிளைகள் இல்லாத ஊரே இல்லை எனும் அளவிற்கு திராவிட கட்சிகளுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை கொண்டிருக்கும் இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மாண்புமிகு அம்மா அவர்களின் லட்சியங்களையும், கொள்கைகளையும் மீட்டெடுக்கும் நமது அரசியல் பயணம் தொடங்குவதற்கு அச்சாணியாக செயல்பட்ட அன்புச் சகோதரர்களான மேலூர் சாமி, செயல் வீரர் வெற்றிவேல் போல பலரை இயற்கை நம்மிடமிருந்து பிரித்திருந்தாலும், கொள்கை பிடிப்பில் உறுதியாக இருந்த அவர்களின் எண்ணம் ஈடேறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள், மக்கள் மத்தியில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை மட்டுமே மூலதனமாக கொண்டு தேர்தலை சந்தித்த நாம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் ஒருசேர வீழ்த்தி நமது இயக்கத்தின் நோக்கத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தினோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நமக்கான வாக்கு வங்கியையும், மக்கள் செல்வாக்கையும் உறுதிப்படுத்தின. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக செயல்படும் ஆண்ட கட்சி, ஆளும் கட்சிகளை எதிர்த்து பல போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் லட்சியத்தை அடையும் வரை இனியும் தொடர்ந்து நடத்துவோம். இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமரவைக்கப்பட்ட துரோகக் கும்பலால் அம்மா அவர்களின் லட்சியங்களும் கொள்கைகளும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு, அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பதவி சுகத்தை அனுபவிப்பதற்காகவும் அம்மாவின் உண்மையான தொண்டர்களுக்கு துரோகம் இழைத்தவர்களின் இன்றையை நிலையை நாடே நன்றாக அறியும். தேய்பிறை போல தேய்ந்து கொண்டிருக்கும் நன்றி மறந்த சுயநலக் கும்பலை நாம் மன்னித்தாலும் தமிழகமும், தமிழக மக்களுக்கும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். விடியலை தருகிறோம் என விதவிதமான வாக்குறுதிகளை வழங்கியதிமுக ஆட்சியில் நடைபெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், போதைப் பொருட்கள் நடமாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து தரப்பு மக்களும் நாள்தோறும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். துரோகக் கூட்டத்திற்கும், தீய சக்திகளுக்கும் மாற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பதை மக்கள்
உணரத் தொடங்கிவிட்டனர்.
எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்களை கடந்து அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வெற்றிப் பயணத்தை தொடர்வதற்கான களமாக வரும் நாடாளுமன்ற தேர்தல் அமைந்திருக்கிறது. தேர்தல் களமாடுவதில் காவியத் தலைவியான அம்மா அவர்களிடம் பயிற்சி பெற்ற நமக்கு, எதிராக நிற்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கான தீவிர பிரச்சாரங்களை முன்னெடுப்போம். கழகத்தின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலில் கோலோச்சிய இதய தெய்வம் அம்மா அவர்களின் கம்பீர திருவுருவம் தாங்கிய கொடி அனைத்து கிளைகளிலும் பட்டொளி வீசி பறப்பதை உறுதி செய்வதும், அனைவரின் இதயம் கவர்ந்த நமது பிரஷர் குக்கர் சின்னத்தையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்ப்பதும் நமது தலையாய கடமையாக இருக்கும் இச்சூழலில் தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடிடுமாறு கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இந்நேரத்தில், மாண்புமிகு அம்மா அவர்கள் முன்னெடுத்த மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை நிலைநிறுத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திடவும், மாநிலத்திற்கு வேண்டிய நலனை பெற்றுத்தருவதிலும் உறுதியோடு பணியாற்றிடுவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி முத்திரையைப் பதித்து அம்மா அவர்களின் உண்மையான வாரிசுகள் நாம்தான் என்பதை உலகிற்கு உணர்த்திட அனைவரும் சபதமேற்றிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.