"மாநிலத்தில் அம்மா ஆட்சி, மத்தியில் மோடி அரசு!" – தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு..!

 
1

சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூவில் ரோடு ஷோ வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அண்ணா நகர் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா, தியாகராய நகர் அதிமுக வேட்பாளர் சத்திய நாரயணன், வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோருக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,

“திருவள்ளுவர் முதல் அப்துல் கலாம் வரை பல மகான்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் நாட்டின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. தமிழர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சென்று சாமி தரிசனம் செய்வதும், ஆந்திர மக்கள் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தரிசிக்க வருவதும் இரு மாநில மக்களுக்கிடையேயான ஆன்மிக மற்றும் பண்பாட்டு உறவை காட்டுகிறது.

ஒரு காலத்தில் ஒரே மாநிலமாக இருந்த மக்களை இணைக்கும் முயற்சியாக திராவிட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது” என இரு மாநில உறவுகள் குறித்து பேசினார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது குறித்து வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும், அதனால் எந்த மாநிலத்துக்கும் இழப்பு ஏற்படாது. தற்போதைய அமைப்பின் அடிப்படையில் கூட 50 சதவீதம் வரை இடங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது” என கூறினார்.

திமுக அரசை விமர்சித்து பேசுகையில், “சென்னையில் வளர்ச்சி பணிகள் நின்று விட்டன. விமான நிலைய மேம்பாடு முன்னேறவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ மற்றும் எஸ்சி/எஸ்டி வழக்குகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், இரட்டை இயந்திர அரசு அவசியம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ”இதேபோல் கடந்த 2019 முதல் 2024 வரை ஆந்திர மாநிலம் பாதிக்கப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மீண்டும் மறுகட்டமைப்பு நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி. ராமச்சந்திரன் பெயர் சூட்டப்பட்டது, தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் நடந்தது. வரலாறு இருக்கும் வரை என்டிஆர் மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் மக்களின் நினைவில் நிலைத்து இருப்பார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றக் கூடியது தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்பதால் எங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தமிழில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “முன்னேற்றம் வேண்டுமா? வேலைவாய்ப்பு வேண்டுமா? அப்படி என்றால் மத்தியில் மோடி அரசு இருக்க வேண்டும், மாநிலத்தில் அம்மா (ஜெயலலிதா) ஆட்சி வர வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் உங்கள் ஓட்டால் தமிழ்நாடு வெல்லும்” என்றார்.