திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது- அமித்ஷா பேச்சு

தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கோவையில் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். சடங்குகள் செய்து கட்டிடம் திறந்து வைத்த அமித்ஷா, கட்டிட திறப்புக்கு பின்பு தொண்டர்களிடம் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழிலே என்னால் பேச முடியவில்லை என்பதை வருத்தத்தோடு, மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடங்குகிறேன். கோவையோடு சேர்த்து மூன்று மாவட்டங்களில் கட்சி அலுவலகம் திறக்கப்படுகிறது, மற்ற கட்சிகளைப் போல் வேலை செய்யும் இடம் என அலுவலகத்தை திறக்காமல், பா.ஜ.க வின் திருக்கோவிலாக இந்த அலுவலகத்தை திறந்து இருக்கிறோம். வரும் காலங்களில் இந்த அலுவலகம் மக்களுக்காக பணியாற்றி, மக்கள் கூடும் இடமாக விளங்க வேண்டும். நிர்மலா சீதாராமன் நல்ல ஒரு பட்ஜெட்டை இந்தியாவிற்கு கொடுத்து இருக்கிறார். MSME, kisaan, போன்ற மூன்று முக்கியமான துறைகளை கணக்கில் கொண்டு சிறப்பான பட்ஜெட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 2024 ஆண்டு பா.ஜ.க வை பொறுத்த வரை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆண்டாக இருக்கிறது. அதே 2024 ம் ஆண்டு தான் பிரதமர் மூன்றாவது முறையாக பதவியேற்று வழி நடத்திக் கொண்டு இருக்கிறார். அதே போல தான் ஒடிசாவில் முழு மெஜாரிட்டியோடு பதவியேற்று இருக்கிறோம்.
அதே போல ஆந்திர பிரதேசத்திலும் என்.டி.ஏ ஆட்சிக்கு வந்து இருக்கிறது. சமீபத்திய தேர்தலில் ஹரியானா மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய பகுதிகளில் ஹட்ரிக் வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கைக்கு உரிய கட்சி பா.ஜ.க என்பதை நிரூபித்து உள்ளது. 2025 ம் ஆண்டின் தொடக்கம் டெல்லி வெற்றியோடு தான் தொடங்குகிறது. அதேபோல 2026 ன் தொடக்கம் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி ஆட்சியுடன் தான் துவங்கப் போகிறது. தி.மு.க வின் தேச விரோத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் துவங்கி விட்டது. பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள், உறுதியாக இருங்கள் 2026 ல் என்.டி.ஏ ஆட்சி தமிழகத்தில் உருவாகப் போகிறது உறுதி. தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய ஆட்சி ஒரு முன் உதாரணமாக, புதிய யுகத்தை உருவாக்கும் ஆட்சியாக இருக்கும். இந்த வகுப்பு பாதம் பிரிவினைவாதம் என்ற சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் புரையோடிக் கொண்டு இருக்கிற ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என்றார்.