திருச்சி வந்த அமித்ஷா- வரவேற்க செல்லாத எடப்பாடி பழனிசாமி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்த அமித்ஷாவை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வரவில்லை.

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இன்று புதுக்கோட்டையில் நிறைவடைகிறது. அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார். அதற்காக அமித்ஷா தனி விமான மூலம் அந்தமானில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், பரஞ்சோதி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அமித்ஷா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார். அங்கே அவர் பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை செல்கிறார் அங்கு நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித்ஷா நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு மீண்டும் திருச்சி வந்து நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார்.
நாளை காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் செல்லும் அமித்ஷா அங்கு சாமி தரிசனம் செய்கிறார் பின்னர் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யும் அவர் அங்கிருந்து புறப்பட்டு மன்னார்புரம் பகுதியில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார் அந்த பொங்கல் விழா நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு மீண்டும் புறப்பட்டு தனி விமான மூலம் டெல்லி செல்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு செல்பவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வந்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படுகிற எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷா வை அவர் சந்திக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தை காரணம் காட்டி அவர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. ஆனால் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்த பொழுது அப்பொழுதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சார கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் சந்தித்தார். ஆனால் தற்பொழுது அமித்ஷாவை அவர் சந்திக்க வராததும் இன்று புதுக்கோட்டையில் நடைபெறக்கூடிய பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


