அமித்ஷா போடும் ஸ்கெட்ச்? தவெக-வின் அடுத்த மூவ் என்ன? NDA கூட்டணியில் இணைகிறதா தமிழக வெற்றிக் கழகம்?

 
1

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இணைய உள்ளதாக கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் கரூர் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. 15 ஆம் தேதி நேரில் ஆஜராகமாறும் உத்தரவிட்டிருந்தது.இதற்காக இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் விஜய்  இரவு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளிக்க உள்ளார். இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இதற்காக பேசியதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த தகவல் உண்மையாக இருக்குமோ எனும்படியாக, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் திடீரென மாவட்ட செயலாளர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை (ஆன்லைன்) அழைப்பு நடத்தி உள்ளார். இதில் முக்கியமாக, சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாம் தனித்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா என மாவட்ட செயலாளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பெரும்பாலானோர் தலைவர் (விஜய்) எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என தெரிவித்த நிலையில், ஒரு சிலர் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுகவை எதிர்த்து களமாட சரியாக இருக்கும் என்ற தங்களின் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமாக யாருடன் கூட்டணி என்று கட்சியின் பெயரை குறிப்பிடாமல் தான் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.மேலும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஒருவேளை கூட்டணி கட்சிக்கு கொடுக்க உங்களுக்கு சம்மதமா என்றும், கூட்டணி வைத்துக் கொண்டால் ஒருங்கிணைத்து பணியாற்ற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக தலைமை தங்களின் கொள்கையில் சற்று தளர்த்தி கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளதாக பேச்சு அடிப்படை தொடங்கியுள்ளது.

தவெக எனும் கட்சியை ஆரம்பித்தபோதே கட்சியின் தலைவர் விஜய் தங்களின் அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தொடர்ச்சியாக பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் இதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்தார்.இந்த சூழ்நிலையில்தான், சிபிஐ சம்மன், பவன் கல்யாண் தரப்பு பேச்சுவார்த்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, கடந்த சில தினங்களாகவே தவெக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி் வருகின்றன.தவெகவை எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்னும் தொடங்காமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாதது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்னும் தொடங்காதது மற்றும் விஜய்க்கு சிபிஐ சம்மன் போன்ற பல்வேறு அம்சங்களும் தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான இறுதி கட்ட முயற்சி என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜயின் டெல்லி பயணத்தின்போது பாஜக தரப்பில் இருந்து கூட்டணி தொடர்பாக அணுகலாம் என்றும் அதற்கான அழுத்தம் தரப்படலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.