தமிழகத்தில் ஏப்ரல் 4, 5 தேதி அமித்ஷா பிரச்சாரம்..!
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜக கூட்டணியில், பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சென்ற முறை பாஜக கூட்டணியில் இருந்த, முக்கிய கட்சியான அதிமுக இந்த முறை கூட்டணியில் இருந்து விலகி தனி அணியாக களம் கண்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி (அதிமுக) தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனை கருத்தில் கொண்டு பாஜக கூட்டணி, தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடியும் பல முறை தமிழகம் வந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக கூட்டங்களில் பங்கேற்றார். கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தமிழகம் வந்த பிரதமர் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருடன் ஒன்றாக பங்கேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 , 5 ஆகிய 2 நாட்கள் பிரச்சாம் செய்கிறார்.
சென்னை, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாகவும், சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தென்சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.