பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பிக்க நடவடிக்கை - அமித் ஷா

பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதில் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய அவர், ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழ்நாட்டின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். CAPF தேர்வுகள் பிரதமர் மோடி வந்த பிறகு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார் என கூறினார்.