அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம்..!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கோயிலுக்கு வந்த அமித்ஷாவை, கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், அவரின் மனைவியும், அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகியுமான பிரீத்தா ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் ஆகிய தெய்வங்களை அவர் வழிபட்டார். அதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து திறந்த வாகனத்தில் மயிலாப்பூர் மாட வீதிகளில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதி ஆகியோரை ஆதரித்தும் அமித்ஷா ரோடு ஷோ சென்று வாக்கு சேகரித்தார்.
அமித்ஷா ரோடு ஷோ சென்றபோது, மயிலாப்பூர் வீதிகளில் தமிழ் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றின் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோடு ஷோ வந்த அமித்ஷாவை அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையை ஒட்டி, மயிலாப்பூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


