3 அமைச்சரவை இடங்கள், 56 தொகுதிகளை கேட்ட அமித்ஷா! மறுப்பு தெரிவித்த ஈபிஎஸ்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அதிகாரப் பங்கீடு தொடர்பான புதிய கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக, டெல்லியில் புதன்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆட்சி அமைந்தால் பாஜகவுக்கு குறைந்தது 3 அமைச்சரவை இடங்கள் வழங்க வேண்டும் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், தேர்தலில் போட்டியிட 234 தொகுதிகளில் 56 தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
அதிகாரப் பங்கீடு குறித்து உடனடி உறுதி அளிக்க பழனிசாமி மறுத்ததாக அதிமுக தரப்பு கூறுகிறது. தேர்தலுக்கு முன் இத்தகைய வாக்குறுதி அளிப்பது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என அதிமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. “அதிமுக வென்றால் பாஜக ஆட்சி” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


