அம்பேத்கர் - கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு..! தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

 
1 1

லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான எஸ்ஓஏஎஸ் (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி), 'அம்பேத்கர்-கலைஞர் சமூக நீதி மற்றும் கூட்டாட்சி வருகை ஆய்வாளர் படிப்பு' (Ambedkar Kalaignar Visiting Fellowship for Social Justice and Federalism) என்ற புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்பேத்கர் மற்றும் கலைஞரின் கண்ணியம், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான தொலைநோக்குச் சிந்தனைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள முடியும்.

சபரீசன் வேதமூர்த்தி நிதியுதவியுடன் இந்த ஆய்வுப் படிப்பு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையுடன் இணைந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கலைஞர் பெயரில் ஒரு ஆய்வுப் படிப்பை உருவாக்கி உள்ளார்.

திராவிடம், ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, மனித உரிமைகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாக சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆய்வுப் படிப்புக்குத் தேவையான பயணச் செலவு, விசா கட்டணம், மூன்று மாதங்களுக்கான ஸ்டைபெண்ட், பல்கலைக்கழகக் கட்டணங்கள் என அனைத்துச் செலவுகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதியுதவியின் மூலம், ஆய்வாளர்கள் லண்டனில் தங்கி, தங்களது முழு கவனத்தையும் ஆய்வுப் பணிகளில் செலுத்த முடியும்.

1

ஆய்வு மாணவர்கள் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுப்பார்கள். அவர்களுக்கு தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநரின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். அவர்கள் வகுப்புகள், கருத்தரங்குகள், பயிலரங்குகளில் கலந்து கொள்வார்கள். படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

சபரீசன் வேதமூர்த்தி திராவிட இயக்கம் தொடர்பான 200 புத்தகங்களையும் எஸ்ஓஏஎஸ் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.