மதுரைக்கு அறிவிக்கப்பட்ட அசத்தல் திட்டங்கள்..!
மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வைகை – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மக்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் முக்கிய அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் வைகை ஆற்றின் நீர் ஆதாரம் மேம்படுவதுடன், தென் மாவட்டங்களில் பாசன வசதி விரிவடைந்து விவசாய உற்பத்தி அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைகை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நதிகளை மாசுபாட்டில் இருந்து மீட்டெடுக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கசடு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நதிக்கரை மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடக்க ஆய்வுக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாநிலம் முழுவதும் நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்த 'முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்' ரூ.2,117 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சிக்கும் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, பசுமை பரப்பு, நகர்ப்புற போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் நிதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த பட்ஜெட்டில் மதுரை மாவட்டத்திற்கு முக்கியமான உயர்கல்வித் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2027-28 கல்வியாண்டு முதல் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி (Specialised Government Law College) அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரி, "School of Excellence in Law" தரத்திற்கு இணையான மேம்பட்ட சட்டக் கல்வியை வழங்கும் வகையில் உருவாக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மேலும், ஆண்டுதோறும் 300 மாணவர் சேர்க்கை திறனுடன் இந்தக் கல்லூரி செயல்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்காக 2026-27 பட்ஜெட்டில் மொத்தம் ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மதுரையில் தொடங்கப்படவுள்ள இந்த புதிய சிறப்பு அரசு சட்டக் கல்லூரி, தென் தமிழ்நாட்டில் தரமான சட்டக் கல்வியை விரிவுபடுத்துவதோடு, மாணவர்கள் நவீன சட்டக் கல்வியைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

