குழந்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி மனு!

 
1

முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பிரசாரத்தின் போது குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறிச் செயல்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசார நிகழ்வுகள் வாக்காளர்களின் முடிவில் எவ்வித சட்டவிரோதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது குழந்தைகள் உணர்ச்சிப்பூர்வமாக ஈர்க்கப்பட்டதாக மனுதாரர் கூறுவது வெறும் கற்பனையான குற்றச்சாட்டு என்றும், மக்கள் அளித்த 27,416 வாக்குகள் வித்தியாசத்திலான வெற்றியை இத்தகைய புகார்கள் மூலம் செல்லாததாக்க முடியாது என்றும் விஜய் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் (Representation of the People Act) தகுந்த சட்டப்பூர்வக் காரணங்கள் இன்றி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி வி. இலட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், விஜய் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி மனுத் தாக்கல் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.