“ஒரு விஜய் இல்ல, 100 விஜய் வந்தாலும் அதிகாரிகளை திருத்தமுடியாது” - வாலிபர் வேதனை

 
“முதலமைச்சருக்கு அனுப்பிய மனு மீது உரிய விசாரணை இல்லை” - வாலிபர் வேதனை

திண்டுக்கல்லில் மனுவுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்த தாசில்தார், செல்போனையும் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் அருண்குமார், தனது நிலம் தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பிய மனு மீது உரிய விசாரணை நடத்தாமல் நிராகரித்துவிட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர், வேடசந்தூர் வட்டாட்சியர், தலைமை நில அளவையர் மற்றும் அதே பிரிவில் பணியாற்றும் சசிகலா ஆகியோர் மனு தொடர்பாக முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுத்ததாக அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியரும், துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், “ஒரு விஜய் இல்லை, 100 விஜய் வந்தாலும், இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வேடசந்தூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தனது செல்போனைப் பறித்ததாகவும் அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.