‘பருவமழைக்கு முன்பாக இந்த வேலையேல்லாம் முடிச்சிடனும்’ - அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு..
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் முருகானந்தம் உள்பட துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆணையர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள அவர், “தமிழ்நாட்டின் 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக,
* நடைபெற்று வரும் சாலை, பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் -
* சாலைகளின் தரம் உறுதிசெய்யப்பட வேண்டும் -
* மழைநீர் வடிகால்களின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைய வேண்டும் -
மேலும்,
* விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைகளை முறைப்படுத்த வேண்டும் -
* சாலை விளக்குகள், நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டும் -
* மக்களுக்குத் தேவையான இடைவெளியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் – என மக்களின் எதிர்பார்ப்புகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு உத்தரவுகளாக வழங்கியுள்ளேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


