தேஜகூ அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் வரவேற்புக்குரியது - தினகரன்

 
TTV

குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு ஆற்றிய உரை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பது வரவேற்புக்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின்தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் ஆற்றிய உரை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.

ttv

மின் கட்டணத்தை குறைக்கும் சோலார் பேனல் திட்டம், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை, சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து வசதி, இயற்கை விவசாயம்ஊக்குவிப்பு, தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏற்பாடு, தமிழ்நாட்டில் புதிய தொழிற்பேட்டைகள் என குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில் இடம்பெற்றுள்ள சிறம்பம்சங்கள், வளர்ந்த இந்தியாவே நம் அனைவரின் லட்சியம் என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சுயதொழில் திட்டங்கள், வங்கிகளில் பெண்களின் சேமிப்பை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகள் அடங்கிய குடியரசுத் தலைவர் அவர்களின்
உரை, பெண்கள் மீதான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. அண்மையில் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என குடியரசுத்தலைவர் கூறியிருப்பது தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் பல லட்சக்கணக்காண தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

ttv

குடியரசுத் தலைவரின் உரையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வளமான, வலிமையான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அமைந்திருப்பதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியங்களை அடுத்து வரும் ஆண்டுகளில் எட்டிப்பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் மக்களுக்கு அளித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.