இன்னும் 2 மாதங்களில் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி! மேயர் பிரியா..!
சென்னை மாநகராட்சியில் உள்ள தெரு நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் முகாமை மாத்தூர் எம்.எம்.டி.ஏ பூங்காவில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என பொதுமக்களும், மாமன்ற உறுப்பினர்களும் தொடர் குற்றச்சாட்டை முன் வைத்தார்கள். 2024 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் ராபிஸ் தடுப்பூசி போடப்படும். முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 3 உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியுள்ளோம்.
ஒரு நாளைக்கு 30 குழுக்கள் அமைக்கப்பட்டு தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளன. ஒரு குழுவுக்கு ஐந்து நபர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 நாய்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளோம். 60 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
மேலும், கூடுதலாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டிய சூழல் இருந்தால், அதற்கென உள்ள மையத்திற்கு சென்று கருத்தடை செய்யுமாறு அறிவித்துள்ளோம்” எனக் கூறினார்.

