அதிகரிக்கும் கொரோனா: மத்திய பிரதேசத்தில் ஜன.31 வரை அனைத்துப் பள்ளிகளும் மூடல்..

 
பள்ளிகள் மூடல்

மத்திய பிரதேசத்தில் ஜனவரி 31 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதன்  காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பெரும்பாலான மாநிலங்களில்  பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடைபெற்று வருகிறது.  அந்தவகையில் மத்தியபிரதேச மாநிலத்தில் 50 சதவிகித  மாணவர்களுடன் பள்ளிகள்  செயல்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில்  மாணவர்கள்  நேரடி வகுப்புகளில் கலந்துகொண்டனர்.

கோரோனா வைரஸ்

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில்  4 ஆயிரத்து 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிகையும் 17 ஆயிரத்து 652 ஆக அதிகரித்ததுள்ளது.  தொடர்ந்து கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதால்,  பள்ளிகளை முழுமையாக மூட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

7 மாணவிகளுக்கு கொரோனா உறுதி; தனியார் பள்ளி மூடல்!

வரும் 31-ம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் இன்று உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி நாளை (ஜன 15) முதல் ஜனவரி 31 வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மூடப்படுகின்றன.  இருப்பினும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான  பருவத் தேர்வுகள்  (Pre Board Exam), ஜனவரி 20 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி  நடத்தப்படும் என்றும்  முதல்வர் தெரிவித்துள்ளார்.   ஆனால்  இந்தமுறை தேர்வுகள் ‘டேக் ஹோம் எக்ஸாம்’( வீட்டிலிருந்தே தேர்வு எழுதும் முறை )  வடிவத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான ஏற்பாடுகளை செய்யவும்  பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள்  மூடப்படுவதோடு, மத்தியப்பிரதேசத்தில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், ஆனால் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் , நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.