"பாமகவில் அதிகாரங்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே உண்டு"- அன்புமணி தடாலடி தீர்மானம்

 
anbumani anbumani

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் கட்சிக்கு முரணானது, அன்புமணி, வடிவேல் ராவணன் இல்லாமல் செயல்படும் கூட்டம் சட்ட விதிகளுக்கு எதிரானது என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

anbumani with ramdass

முதலாவது தீர்மானத்தின்படி,  “தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களால் 16.07.1989 ஆம் நாள் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரலாக செயல்பட்டு வருகிறது. மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டு செயல்பட்டு வரும் அக்கட்சி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வன்னியர்கள், இஸ்லாமியர்கள்,  அருந்ததியர்கள் ஆகியோருக்கு  மாநில அளவிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு  தேசிய அளவிலும் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள். அவரது வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புள்ள கட்சியாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகளுக்கு உரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில்  பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்திச் செல்லப் போவதாக கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடந்த ஏப்ரல் 12 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டு இருந்ததை இந்தக் கூட்டம் நினைவு கூறுகிறது. அவரது நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்களை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் கொண்டாடுகிறது; போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் பணியாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு; பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதி 15ன் படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பதை இக்கூட்டம் நினைவு கூர்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் அழைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை ஆகும்.

anbumani

பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியினை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு கூட்டம் உறுதி ஏற்கிறது” என நிறைவேற்றப்பட்டது.