நவம்பர் 1 முதல் இவையெல்லாம் மாறப்போகுது..!

 
1

ஜிஎஸ்டி விதிமுறைகளில் மாற்றம்

இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டப்படி, ஜிஎஸ்டி விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை நவம்பர் 1ஆம் தேதியின் இருந்து அமலுக்கு வருவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, விற்பனைக்கு பிந்தைய தள்ளுபடி நடைமுறையில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இதுபோன்று தள்ளுபடி வழங்குவதற்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும் என விதிமுறை இதன் மூலம் நீக்கப்படுகிறது.

இந்த நகர்வு உடனடி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பயனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பணம் விடுவிப்பு, இ-வணிக விற்பனையாளர்கள், சிறிய ஏற்றுமதியாளர் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகளிலும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

FASTag விதிமுறையில் மாற்றம்

நான்கு சக்கரம் மற்றும் வணிக வாகங்களுக்கான FASTag விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அறிவிப்பின்படி, சுங்க சாவடிக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்களுக்கான சலுகை விலை உள்ளூர் FASTag அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வணிக வானங்கள் அல்லாதவர்கள் இந்த உள்ளூர் FASTag-யை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை சுங்க சாவடி கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக, வருடாந்திர கட்டண முறையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, சுங்க சாவடி அமைந்திருக்கும் நகராட்சி அல்லது உள்ளூர் நகர எல்லைகளுக்கு வெளியே இருப்பவர்களுக்கு வருடக் கட்டணம் ரூ. 1,500 ஆகவும், உள்ளே இருப்பவர்களுக்கு வருடக் கட்டணம் ரூ. 3,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முறை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக்

தமிழ்நாட்டில் நவம்பர் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 1,000-க்கு மேல் மதுபானங்களை வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

ரொக்கத்தை கையாள்வதில் இருக்கும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ. 500 மேல் மதுபானம் வாங்கினால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்பு

தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான குறைந்தப்பட்ச பயணத் தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச தூரத்தைத் தாண்டி பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும், 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலைப்பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணத்தைப்போல் 1.2 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை கட்டணமாக 60 ரூபாயும், கூடுதலாக மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு என்று அடிப்படை கட்டணமாக 30 ரூபாயும் நிர்ணயிக்கப்படுகிறது.

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை அமல்

தமிழ்நாட்டில் 4 வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்களுக்கு நவம்பர் 2 முதல் காகிதமற்ற பதிவு முறை கட்டாயமாக்கப்படுவதாக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யும் பத்திரம் ஆகிய 4 வகையான ஆவணங்கள் 02.11.2026 முதல் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.