உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கு அனைத்து பட்டதாரிகளையும் அனுமதிக்கலாம் - அன்புமணி வலியுறுத்தல்..

 
anbumani

உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித்தேர்வில் அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்களையும் அனுமதிக்கலாம் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித்தேர்வுகளில் 8 வகை இளம் அறிவியல் (பி.எஸ்சி) படிப்புகள், 8 வகை பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட 21 வகையான பட்டப்படிப்புகள் மட்டும் தான் அடிப்படைத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இதனால், பிற அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்களைப் பெற்றவர்கள் இந்தப்போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாது.

tnpsc

பிற அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை இந்தப்பணிக்கு அனுமதிப்பதில்லை என்பது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தவறான புரிதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தானே தவிர, அதை நியாயப்படுத்துவதற்கு வலுவான காரணங்களோ, ஆதாரங்களோ தேர்வாணையத்திடம் இல்லை.

எடுத்துக்காட்டாக வன நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத இளம் அறிவியல் கணிதம், புள்ளியியல் படித்தவர்களும், கணினி அறிவியல், மின்னியல், மின்னனுவியல், சிவில் ஆகிய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இதற்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வனத்துடன் தொடர்புடைய மற்ற பொறியியல் பட்டங்கள் இப்பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

TNPSC

கணிதம், புள்ளியியல் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருந்தால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், இதே பாடங்களை பொறியியல் படிப்பில் படித்த செராமிக் தொழில்நுட்பம், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், துணி தொழில்நுட்பம், ரப்பர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

anbumani

 கணிதம், புள்ளியல் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12ம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருந்தால், அவர்களால் உதவி வனப்பாதுகாவலர் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் நம்புகிறது. தமிழ்நாட்டில் எந்தப் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக பத்தாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருப்பார்கள்.

அதனடிப்படையில், எந்த ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களையும் உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதிப்பதில் தவறு இல்லை. எனவே, வரும் நவம்பர் மாதம் தமிழக அரசுப் பணி தொகுப்பு 1 ஏவில் வரும் உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் போது எந்தவொரு பொறியியல் பட்டம் பெற்றவரும் அதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.