தேனி சிறையில் இருந்து தப்பிய 17 பேரும் 43 மணி நேரத்தில் பிடிப்பட்டனர்..!
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச் சாலையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 26) தப்பிச் சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக நேற்று வரை, தப்பி சென்ற கைதிகளில் 13 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இன்று காலை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரெஜின், பொன்முத்து செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், எஞ்சியிருந்த மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய இரு கைதிகளும், தேனி மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதை கண்டறிந்த, தேனி மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார், இன்று மாலை அவர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் கானா விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, தேனி சிறைச்சாலையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் 43 மணி நேரத்தில் போலீசார் பிடித்துள்ளனர்.
இதனிடையே, தப்பி சென்றவர்களில் முதலில் கைது செய்யப்பட்ட பிரவீன் குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்க பிரசாத் ஆகிய ஐந்து பேரிடம் தேனி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து, அந்த ஐந்து பேரும் ஆண்டிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாசில் முகமது, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நவம்பர் 10-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த ஐந்து பேரும் மீண்டும் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, (அக்.27) பிடிபட்ட 13 கைதிகளை தவிர்த்து எஞ்சிய நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கைது செய்யப்பட்ட 13 பேரிடமும் காவல்துறையினர், நான்கு பேர் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, அந்த நான்கு பேரும், தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அம்மச்சியாபுரம் மலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில், அம்மச்சியாபுரம் மலைப் பகுதியை காவல்துறையினர் (அக்டோபர் 27) சுற்றி வளைத்து தேடுதல் பணியை தொடங்கினர். இந்நிலையில்,நேற்று (அக்டோபர் 28) காலை வரை நடைபெற்ற தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அந்த மலையின் நான்கு புறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மலை ஏற தொடங்கினர். இந்த அதிரடி வேட்டையின்போது ரெஜின், பொன்முத்து செல்வம், மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய 4 கைதிகள் போலீசில் சிக்கினர்.

