தமிழக எல்லையில் உஷார்... மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்..!

 
1

வெஸ்ட் நைல் என்ற வைரஸ் காய்ச்சல் கேரளாவில் ஆட்டம் காட்டி வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பரவியுள்ளது. இதன் அறிகுறிகள் உடன் மருத்துவமனைகளில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இங்கேயும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசுக்களால் தான் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. எனவே நாம் வசிக்கும் வீடுகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வீடுகளை ஒட்டி தேவையற்ற வகையில் தேங்கியிருக்கிற தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். கேரளாவில் தான் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் இருக்கிறது. அங்கிருந்து 13 வழித்தடங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் தமிழகத்திற்கு வருகின்றனர். அங்கே எல்லாம் கண்காணிப்பு பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வெஸ்ட் நைல் வைரஸ் குறித்து வல்லுநர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, இந்த வகை காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து பிற மனிதர்களுக்கு பரவாது. இருப்பினும் முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம். வெஸ்ட் நைல் வைரஸானது கியூலக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது.