சென்னையில் விடிய விடிய படுஜோராக நடக்கும் மதுவிற்பனை! நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
சென்னை சிஐடி நகரில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்று வருவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை நடைபெறுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சிஐடி நகர் பகுதியில் செயல்படும் மதுக்கடையில் விடிய விடிய மது விற்பனை நடப்பதால் அந்த பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் குடித்து விட்டு அங்கேயே ரகளையில் ஈடுபடுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். பகல் நேரங்களில் விற்பனையாகும் மதுபானங்கள் போல் அனைத்து ரக மதுபானங்களும் 24 மணி நேரமும் கிடைப்பதால் இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து டாஸ்மாக் கடை 24 மணி நேரம் செயல்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.


