ஜல்லிக்கட்டில் சதி; நான்தான் முதலிடம் பெற்றேன் - அபிசித்தர் பரபரப்பு பேட்டி

 
jallikattu

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நிறைவு அடைந்தது.

ஜல்லி

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் கண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரருக்கு  7லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதே போன்று களத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி மாவட்டம் மேலூர் குணா என்பவரது  காளை உரிமையாளருக்கு 7 லட்சம் மதிப்பிலான ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி என்பவரது காளைக்கு பைக் பரிசாகவும் வழங்கப்பட்டது.

இதையடுத்து 2வது இடம்பிடித்த மாடுபிடி வீரரான 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற வீரருக்கு  பைக் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பரிசு அறிவிப்பில் சதி நடந்துவிட்டதாக கூறி பரிசை வாங்க மறுத்து புறக்கணித்து சென்றார். இதுகுறித்து அபிசித்தர் அளித்த பேட்டியில், “ஜல்லிக்கட்டை மாலை 6.30 மணி வரை நீட்டித்தது தவறு. ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன். எனக்கு கார் பரிசு தேவையில்லை. முதலிடம் பெற்றதாக அறிவித்தாலே போதும். அமைச்சர் மீது புகார் அளிக்க உள்ளேன். ஜல்லிக்கட்டு சுற்றுகளில் சம வாய்ப்பு அளிக்கவில்லை. கமிட்டி ஒருதலைபட்சமாக செயல்பட்டது. வாய்ப்பு கொடுத்திருந்தால் முதல் பரிசு வென்றிருப்பேன். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்” என்றார்.