ஆகாஷ் காவல் மரணம்- காவல் துறையினர் 6 பேர் சஸ்பெண்ட்
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் காவல் மரண சம்பவத்தில் காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் கூலி தொழிலாளர்கள் ஜெயபாண்டி, அழகர் ஆகிய இருவரையும் டூ வீலரில் கையில் வாளுடன் வந்த இருவர் விரட்டி விரட்டி வெட்டினர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (26) , குணா ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது தப்பிக்க முயன்ற போது கால் முறிந்ததாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 8 ம் தேதி அதிகாலை மூச்சு திணறலால் உயிரிழந்தார். ஆனால் உறவினர்கள் போலீசார் அடித்து கொலை செய்ததாக கூறி 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலை மானாமதுரை பைபாஸ் ரோட்டில் டெண்ட் அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி 12 ம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டகாரர்கள் வெளியேறினர், இந்நிலையில் ஆகாஷின் தாய் ஆனந்தியிடம் தமிழக அரசின் நிதியுதவி ஆறு லட்ச ரூபாயை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார்.
இந்நிலையில் மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் காவல் மரண சம்பவத்தில் காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

